Recently I received this email from devaram yahoo groups to which I subscribe. People who beleive in temple culture and aagamas should read it. After reading what? I dunno?
----------------------------------------------------------------------------------
சிவமயம்
திருச்சிற்றம்பலம்
நாட்டுக்கு நல்லதல்ல
திருக்கோயில்களின் அர்ச்சகர்களாக அனைத்து ஜாதியினரும் நியமக்கப்படுவர் என்ற தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு இந்து மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆலயங்களின் அமைப்பு, நித்திய பூஜை விதிகள், உற்சவங்களை நடத்தும் முறைகள், பூஜை செய்வதற்குரியவர் தகுதிகள், பிராயச்சித்த விதிகள் ஆகிய அனைத்தினையும் வரையறுக்கும் சட்ட நூல்கள் சிவாகமங்களாகும். சிவபிரானின் திருவாக்காகிய 28 சிவாகமங்களின் படியே சிவாலய பூஜை நடைபெற்று வருவது தொன்மையான மரபாகும். சான்றாக, சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதி சங்கரர் ஆலயம் காமிக ஆகம முறைப்படி பராமரிக்கப்படுகிறது. திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் திருக்கோயிலின் சட்ட நூல் காரணாகமம். தஞ்சை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலுக்குரியது காமிக ஆகமம். திருவீமிழலை ஆலயம் காரணாகம விதிப்படி பாதுகாக்கப்படுகிறது. ஆதி சைவப் பிராமணர்கள் அல்லது குருக்கள் அல்லது பட்டர் என்று அழைக்கப்படுவார் மட்டுமே கருவறையில் சென்று மூலவருக்கு அபிஷேக வழிபாடு செய்யத் தகுதியுடையவர் என்றும் பிற எவரும் அப்பணியைச் செய்யக் கூடாது என்றும் சிவாலய சட்ட நூல்களாகிய சிவாகமங்கள் விதிக்கின்றன. "முப்போதும் திருமேனி தீண்டுவார்" என்று ஸ்ரீ சுந்தர மூர்த்தி சுவாமிகள் அச்சிவாசாரியப் பெருமக்களைப் போற்றுகிறார். சிவாகமங்களுக்கு விரோதமாக ஆதிசைவப் பெருமக்கள் தவிரப் பிறர் சென்று பூஜிக்க அந்த ஆகமங்கள் அனுமதிக்கவில்லை. சிவாகமங்களின் விதியை மீறி நடக்க முற்படுவது நாட்டுக்கு நல்லதல்ல.
ஆதிசைவப் பிராமணர்களைத் தவிர வேறு பிராமணர்கள் கூடக் கருவறையுள் நுழைய முடியாது. சங்கராச்சாரிய சுவாமிகள் கூட சிவாலயக் கருவறையில் செல்ல, மூலவரைத் தொட்டு பூஜிக்க உரிமை கிடையாது. எண்ணற்ற சிவாலயங்களைத் தமது ஆளுகைக்குள் கொண்ட சைவ ஆதீனங்களாகியத் திருவாவடுதுறை, தருமபுரம், திருப்பனந்தாள் ஆகியவற்றின் ஸ்ரீலஸ்ரீ குருமஹா சந்நிதானங்கள் கூட ஆதீனத் திருக்கோவில் கருவறைக்குள் செல்ல முடியாது. செல்லவும் மாட்டார்கள். பாரத நாட்டின் ஜனாதிபதியாக இருந்த திருமிகு.வெங்கட்ராமன் அவர்கள் (பிராமணராக இருப்பினும்) சிதம்பரம் ஸ்ரீ நடராஜப் பெருமான் பொன்னம்பலத்திற்குள் செல்ல வேண்டுமாயின் சட்டையைக் கழற்றி வருமாறு அவ்வாலய தீட்சிதர்களாகிய அர்ச்சகர்கள் வலியுறுத்திய நிகழ்ச்சி செய்தித்தாளில் வந்தது. ஆதீன மடாதிபதிகள் செல்லாத கருவறைக்குள் ஆதிசைவப் பிராமணரையன்றி மற்றவர்களை அனுமதிக்க முற்படுவது நாட்டுக்கு நல்லதல்ல.
தஞ்சாவூர் ஸ்ரீ பிரகதீஸ்வரர் திருக்கோயில் கட்டிய பெருமையுடைய ராஜராஜ சோழ மன்னர் ஆதிசைவப் பிராமணர்களையே பூஜகராக நியமித்து அவர்கள் வாழ்க்கைக்கு நிலமான்யம் செய்து கொடுத்துள்ளார். பராக்கிரம பாண்டிய மன்னர் கட்டிய தென்காசி ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஆலயப் பூஜை பொறுப்பினை ஆதி சைவப் பிராமணர்களிடமே ஒப்படைத்தார். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதி சங்கரலிங்கப் பெருமான் திருக்கோயில் எழுப்பிய உக்கிரபாண்டிய மன்னர் பிரான் சிவாசாரிய பெருமக்களையே அர்ச்சகராக நியமித்து அவர்கள் ஜீவனாம்சமாக நிலபுலன்கள் எழுதி வைத்துள்ளார். இதைப் போலவே, நமது தமிழக மன்னர் பெருமக்களும் தாங்கள் கட்டிய ஆலய நித்திய பூஜை முறையினை சிவாகம சட்டப்படி சிவாச்சாரியார்களிடமே விட்டுள்ளனர். அந்த மன்னர்கள் யாருமே பிற சாதியினரை அர்ச்சகராக்கவில்லை. அவர்கள் பேணிப் பாதுகாத்த சிவாகமப் பாரம்பரியத்தை உடைத்தெறிய முற்படுவது நாட்டுக்கு நல்லதல்ல.
தமிழக இந்து மக்களுக்கோ, இதைப் பற்றிய அக்கறை கிடையாது. பொறுமை, சகிப்புத்தன்மை, திருக்கோயில் பற்றிய அலட்சியப் போக்கு இவை தாம் தமிழக இந்து மக்களின் மறுபெயர். சாதி, சினிமா, அரசியல் ஆகியவற்றில் காட்டும் அளவுக்கு மீறிய ஈடுபாட்டில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட சமயங்களின் நிலை குறித்து அக்கறை காட்ட மாட்டார்கள். டென்மார்க் கார்ட்டூன் விஷயத்தில் கொதித்து எழுந்த இஸ்லாமிய சகோதரர்களைப் பார்த்து லட்சத்தில் ஒரு பங்கு கூட தங்கள் மதத்தில் அபிமானம் காட்ட மாட்டார்கள் இந்துக்கள். "தி டாவின்சி கோட்" திரைப்பட விஷயத்தில் கிறிஸ்தவர்கள் பொங்கி எழுந்த காட்சியாவது இந்துக்களை மாற்றுமா? வருஷத்திற்கு ஒரு முறை கொடை நடத்தி விடுவது, திருவிழாக்களுக்குச் சென்று உண்டியல் போட்டு விட்டுத் திரும்புவது இவற்றோடு ஆலயங்கள் பற்றிய சிந்தனை இந்து மக்களிடம் இருந்து விடை பெற்று விடும். எனவே இந்து மதத்தவர்கள் இந்த புதிய சட்டத்தைப் பற்றி கவலை கொள்ள மாட்டார்கள்.
தமிழக அரசியல் கட்சிகள் இவ்விதத்தில் ஆலய பாரம்பரியப் பெருமையைக் காப்பாற்ற முன்வருமா? அது எப்படி வரும்? "மதச் சார்பற்ற தன்மை" என்ற கற்பின் உச்ச நிலையில் இந்துக்களைப் பொறுத்த வரையில், நிற்பவை அக்கட்சிகள். ஓட்டு வங்கியின் இருப்பினை அதிகரிக்கும் கட்டாயத்தில் உள்ள அவை இந்துக் கோயில்களின் பெருமை மிக்க பாரம்பரியத்தைப் பாதுகாக்க ஒருநாளும் முன்வரமாட்டாதவை. 'இந்துத்துவா' வை உயிராகக் காட்டும் கட்சி கூட இவ்விஷயத்தில் செயல்படும் விதம் வேடிக்கை கலந்த வேதனையைத் தருகிறது.
தமிழக இந்து அறநிலயத்துறை ஆட்சியின் கீழ்வரும் 30,000 திருக்கோயில்களில் சுமார் 100 ஆலயங்களில் பணியாற்றும் சிவாச்சாரியப் பெருமக்களுக்குத்தான் நல்ல வருமானம் கிடைக்கும். பிற ஆலய ஆதிசைவப் பிராமணர்கள் போதிய வருவாயின்றி வறுமையில் வாடுவது கண்கூடு. அந்த சொற்ப வருமானத்தையும் உதறி விட்டு ஓட ஓட விரட்டுவது நாட்டுக்கு நல்லதா? ஒரு ஆலயத்தில் 20 பணியாளர்கள் வேலை பார்த்தால் அதில் 2 பேர் தான் சிவாச்சாரியப் பிராமணர்களாக இருப்பர். மீதியுள்ள 18 பேரும் பிறசாதியர் தான். ஓதுவார் மணியம், கணக்கர், பலவேலை, மேளம், காவல், துப்புரவாளர் ஆகிய பிற பணியாளர்கள் பிராமணரல்லாதவரே. எனவே 2 பேரை விரட்டுவதைத் தவிர்த்துப் பிற 18 பேரையும் காப்பாற்ற நடவடிக்கை எடுக்கக்கூடாதா? 30,000 ஆலயங்களில் பணியாற்றும் ஆதி சைவர்கள் சொற்பமே. அர்ச்சகர் தவிர பிற ஊழியர்கள் அனைவரும் பிராமணரல்லாத பிறசாதியினரே. எனவே ஆதிசைவப் பிராமணர்களைப் பழி வாங்குவதை விட்டு விட்டு ஒட்டுமொத்தமாக ஆலய அனைத்து ஊழியர்கள் அனைவருக்கும் உயர்ந்த ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் தீர்மானித்தால் அது நாட்டுக்கு நல்லது.
ஆலய பூஜை முதலியவற்றில் நிகழும் தவறுகள் நாட்டினையே பாதிக்கும் எனப் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே திரு மூல நாயனார் தமது திருமந்திரத்தில் அருளிச் செய்துள்ளார். அதில் ஒரு திருமந்திரம் இதோ.
"முன்னவ னார்கோயில் பூசைகள் முட்டிடின்
மன்னர்க்குத் தீங்குள வாரி வளம்குன்றும்
கன்னம் களவு மிகுத்திடும் காசினி
என்னரு நந்தி எடுத்துரைத் தானே"
எனவே தமிழக முதலமைச்சர் அவர்கள் அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராக்கும் திட்டத்தை விட்டுவிட்டுத் தமிழக ஆலயங்களில் பணியாற்றும் ஏழை சிவாச்சாரியார்களையும், எண்ணற்ற பிறசாதி ஆலயப் பணியாளர்களையும் காப்பாற்றும் வகையில் உரிய நடவடிக்கை எடுத்துதவுமாறு வேண்டுகிறோம்.
இவண்
மா.பட்டமுத்து M.Sc., B.T.,
அமைப்பாளர்,
ஸ்ரீ கோமதி அம்பிகை மாதர் சங்கம், சங்கரன்கோவில்.
திருமந்திர வழிபாட்டு மன்றம், சங்கரன்கோவில்,
ஸ்ரீ திருநாவுக்கரசர் சுவாமிகள் உழவாரக் குழு, விக்கிரமசிங்கபுரம்
ஸ்ரீ சுந்தரமூர்த்தி நாயனார் அடியார்குழாம், கரிவலம்வந்தநல்லூர்
ஸ்ரீ மங்கையர்க்கரசி மாதர் மன்றம், ஸ்ரீ வில்லிபுத்தூர்
ஸ்ரீ மாசிலாமணியீஸ்வரர் உழவார நற்பணிமன்ற்ம்,
வடதிருமுல்லைவாயில், சென்னை