People I know

Wednesday, August 23, 2006

"ஆட்டோ"கிராப் (அ) புது பேரம்

தாம்பரத்திலிருந்து அடையார், மயிலாப்பூர், திருவான்மியூர் எல்லாம் எப்படி போவது என்று என்னை கேளுங்கள் சொல்கிறேன். நேராக வேளச்சேரி விஜயநகர் பஸ் ஸ்டாண்டுக்கு வந்து விடுங்கள், அங்கிருந்து ஷேர் ஆட்டோ பிடித்து போய்க்கொள்ளுங்கள். 15 ரூபாய்குள் மேட்டர் முடிந்து விடும். அன்றைக்கு ஆனால் வேளச்சேரி வரை மட்டுமே செல்ல வேண்டியிருந்தது. ஆனால் அங்கே எதிர்பார்க்காமல் சந்தித்த நண்பன் ஒருவன் சொன்னபடி பெஸண்ட் நகர் சென்று ஜீஸ் குடிக்கலாம் என்று முடிவானது. அவன் நம்மை போல ஷேர் ஆட்டோ பார்ட்டி கிடையாது, கொஞ்சம் பெரிய இடம்.

ஆட்டோ ஒன்றை கூப்பிட்டான். அவர் 70 ரூபாய் சொல்லி 60 க்கு படிந்தார். ரொம்ப அதிகம் என்று நண்பன் நொந்துக்கொண்டான். ஆனால் ஒரு கோப்பை ஜூஸ் 45 ரூபாய் என்று ஆங்கிலத்தில் சொல்லவும் பேரம் பேசாமல் வாங்கி குடித்தோம். நேரம் குறைவாக இருந்ததால் உடனே கிளம்பிவிட்டோம். அந்த ஆட்டோகாரருக்கு என்னை பிடித்துவிட்டத்தோ என்னமோ அவரே வெளியில் காத்திருந்து என்னை ஏற்றிக்கொண்டார். (நீங்க குடுக்கறத குடுங்க சார்!).

அவர் என்னை பற்றி கேட்டார், நான் சொல்லி விட்டு பதிலுக்கு அவரை பற்றி கேட்டேன். மிகவும் சுவாரசியமான கதையாக இருந்தது அவருடையது. திருநெல்வேலி பக்கத்தில் ஏதோ ஒரு கிராமத்தை சேர்ந்த அவர் சின்ன வயதில் புத்தகங்களில் வரும் மெட்றாஸ் என்ற சொல்லை கேட்டு மிகவும் கவரப்பட்டதாகவும், 12 வயதில் கூட படிக்கும் சிலருடன் சென்னைக்கு ஓடி வந்து விட்டதாகவும், 3 நாட்கள் சென்னையில் பயந்துக் கொண்டே கழித்த கதையையும் மற்றும் சென்னையின் தன்மை அறிந்து கஷ்டப்பட்டு ஊர் போய் சேர்ந்ததாகவும் சொன்னார்.

பின்னர் பல்வேறு காரணங்களால் ஆட்டோ ஓட்ட நேர்ந்த கதையையும் ஆனால் திருநெல்வேலியில் நிறைய சொந்த பந்தங்கள் இருப்பதால் அவர்களுக்கு இலவச சவாரி செய்ய நேர்ந்ததால் சென்னைக்கு வேலை தேடி வர நேர்ந்ததாகவும், பல்வேறு வேலைகள் செய்து கடைசியில் ஆட்டோ ஓட்டுநராகவே ஆனதையும் விளக்கினார். (அவருக்கு வயது 42) தன் குழைந்தகளுக்கு நல்ல கல்வி கிடைக்க பாடுபடுவதையும் விளக்கினார். ஒரு சினிமாவை விட சுவரசியமாய் இருந்தது அவர் வாழ்க்கை.

இறுதியில் வேளச்சேரி வந்தவுடன் நான் ஒரு 100 ரூபாய் தாளை கொடுத்து "உங்க வாடகையை எடுத்துகொங்க" என்றேன். மிகவும் தயக்கத்துடன் 70 ரூபாய் மிச்சம் கொடுத்தார். நான் அவரிடம் மேலும் 20 ரூபாய் கொடுத்து "வெச்சிக்கங்க" என்று சொல்லி நடந்தேன். அவர் அன்புடன் பார்த்துக்கொண்டிருந்தார். தாம்பரம் வண்டி வர தாமதமானது. எங்கிருந்தோ அந்த ஆட்டோகாரர் திரும்ப வந்து "பஸ் வரலயா? கொஞ்ச நேரத்துல வந்திரும்' என்று சொல்லி நான் பஸ் ஏறினவுடன் சென்றார். எனக்கு அவசரமாக் தாம்பரம் திரும்ப வேண்டும் என்று சொன்னதை ஞாபத்தில் வைத்து என்க்கு உதவலாம் என்று வந்தார் என்று நினைத்தேன்.

இதை போலவே ஒரு அனுபவம் மதுரையில் ஒரு ஆட்டோகாரரிடம் நிகழ்ந்தது. அவருடைய கதையை என்ன காரணத்தினாலோ என்னிடம் பகிர்ந்து கொண்டது மட்டும் இன்றி வாடகையும் மிக குறைவாக கேட்டார். நான் வற்ப்புறுத்தி நார்மல் ரேட்டை கொடுத்தேன்.

நினைத்து பார்த்தால் எல்லோருக்குள்ளும் ஒரு கதை இருக்கிறது. அதை யாரிடமாவது பகிர்ந்துக் கொள்ள ஆசையும் இருக்கிறது. ஆனால் இந்த அவசர யுகத்தில் எல்லாம் பணதை பங்கு போட்டுக்கொள்வதில் கவனம் செலுத்து மனதை மறந்து மிருகமாக ஐந்துக்கும் பத்துக்கும் சண்டை போடுகிறோம். அன்பை ஆதாரமாக வைத்து நடக்கும் பேரம் வியாபர நியதிக்கு எதிர் திசையில் செல்வதை எப்பொழுதும் கவனித்திருக்கிறேன்.

"அன்பின் வழியது உயிர் நிலை" - திருவள்ளுவர்.

2 Comments:

  • PB,
    I feel this in all our transactions in the present day world. Suthi irukkaravangaloda prachinaigal/kadhaigal kekkave namakku neramilladha vaazhkaiya vaazhdhu kittu irukkom..:(

    By Blogger The Doodler, at 4:12 PM  

  • Maaplai....Pinnitte da !! Chance-e-ille.......Touched !

    By Blogger dinesh, at 8:45 AM  

Post a Comment

<< Home