People I know

Saturday, August 26, 2006

எல்லாம் தெரிந்தும் கொஞ்சம் தெரிவதில்லை!

குடும்பம்:
"என் பையனுக்கு நான் guarantee ங்க"
"ஆமா அவன் foreign ல தான் இருக்கான், ஆனா நம்ம கலாசாரம் தான் அவனுக்கு பிடிக்கும், ஒரு கெட்ட பழக்கம் கிடையாது, படிக்கிற காலத்துல வாராவாரம் கோயில் குளம்னு சுத்தின பய தான்".

"ஆமாங்க சீக்கிரம் இங்கயே வந்திரனும்னு தான் சொல்லிகிட்டு இருக்கான். வாராவாரம் அங்க இருக்கிற கோயில்களுக்கு போனாக்கூட நம்ம மீனாட்சி அம்மன் கோயில் மாதிரி வராதுமா, சீக்கிரமே india வந்து settle ஆயிடனும்னு சொல்லிகிட்டு இருக்கான்".

"என்னது எங்களுக்கு தெரியாமயா, எங்க பையன் அப்படி கிடையாதுங்க, எங்களுக்கு தெரியாமா அவன் எதுவும் செஞ்சது இல்லை. அவன பத்தி அவனை வளத்த எங்களுக்கு எல்லாம் தெரியும். எங்க வார்த்தைய தட்ட மாட்டான், நீங்க நம்பி ஜாதகத்த அனுப்புங்க".

"சந்தோஷம், அப்ப வர வெள்ளி கிழம நல்ல நாள் அன்னிக்கே வந்து பொண்ண பாக்குறோம், அவனுக்கு photo வ Email பண்ணிட்டோம்"

"அதெல்லாம் நாங்க சொன்னா போதும். ஒத்துப்பான்"

"சரி வெச்சிடறேன்"

அம்மா மீனாட்சியம்மாள் யாரோ பெண் வீட்டுக்காரர்களிடம் பேசிவிட்டு போனை வைததாள். அப்பா சுந்தரேசன் "என்னடி நம்ம பையனுக்கு 24 வயசுதானே ஆகுது, ஏன் இப்படி அவசரமா பொண்ணு பாக்குற. அவன் எண்ண நினைச்சுகிட்டு இருக்கானோ என்னமோ? அதான் அடுத்த வாரம் வரானே அதுவரை பொறு அவன கேட்டு முடிவு செய்வோம்" என்றார்.

"விவரமில்லாம பேசறதே உங்க பொழப்பு. அவன எப்படியாவது வழிக்கு கொண்டு வந்து பாத்து வெச்சிருக்கிற நாலு அஞ்சு பொண்ணுகள்ள ஒன்ன் முடிச்சிபுடுவோம். இந்நேரம் அவன் என்ன பண்ணிகிட்டுயிருக்கான்னு யாரு guarantee கொடுக்க முடியும், அவன் காலேஜல படிக்கிற காலத்திலயே வாரா வாரம் கோயிலுக்கு போறேன்னு அங்கன ஒரு பொண்ணு கூட சுத்தின பய தானே, நமக்கே தெரியாம கல்யாணம் பண்ணிக்க போய் ஜாதி பிரச்சனை ஆகி அவன அடிச்சி போடவும், நமக்கு ஆஸ்பத்திரில வேச்சு கொஞ்சம் விவரம் சொன்னான். அவன நம்ப முடியாதுங்க, எப்படியாவது பேசி ஒரு இடத்துல நிச்சயம் பண்ணிடணுங்க, இல்லன்னா இன்னும் என்னென்ன பாக்க வேண்டியிருக்குமோ?" என்று கூறினாள். சுந்த்ரேசன் பெருமூச்சு ஒன்றை பதிலாய் எறிந்தார்.

தெய்வம்
"பெருமாளை சர்வக்ஞன் (அனைத்தும் அறிந்தவன்) என்று கூறுவதை நாங்கள் ஒத்துக்கொள்ள மாட்டோம், அவனுக்கு அடியார்களிடம் உள்ள சிறு சிறு குறைகள் தெரிவத்தில்லை, அவர்களை அதற்காக தண்டிக்காமல் அருளை பொழிவதால், பெருமாளே உனக்கு எல்லாம் தெரியும் என்கிற கருத்தை எதிர்க்கிறோம்"

- கூரத்தாழ்வார்.

தொண்டர்:

மாசில் வீணையும் மாலைமதியமும்
வீசு தென்றலும் வீன்க்கிள வேனிலும்
மூசு வண்டறை பொயகையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நிழலே
- அப்பர் பெருமான்.

குற்றமில்லாத வீணையின் நாதம், மாலையில் வீசும் முழு மதி, வீசும் இனிமையான தென்றல், இள வேனிற்காலம், வண்டுகள் மொய்கின்ற பொய்கை போன்றது சிவபெருமானின் திருவடிகள் என்றார். சிவபெருமானின் இணையடி தரும் குளிர்ச்சி தெரிந்து பாடும் வேளையில் தான் மிக கொடிய வெப்பம் மிகுந்த சுண்ணாம்பு காளவாயில் நின்றுக்கொண்டிருக்கிறோம் என்று தெரியவில்லை. இவரை போய் ஞானி என்று அழைப்பது எங்ங்னம் தகும்.





Thursday, August 24, 2006

கலி வசிக்கும் இடங்கள்

கிருஷ்ணரால் உயிர்பிக்கப் பட்டவனும் அபிமன்யுவின் மகனுமாகிய பரிஷித் ஒரு முறை காட்சி ஒன்றை கண்டான். தர்மம் பசு வடிவம் தாங்கியிருப்பதுவும் அவளுடைய நான்கு கால்களாகிய தவம் தூய்மை தயை சத்யம் என்னும் நான்கு கால்களில் மூன்றை ஆசை, சந்தேகம், கர்வம் கொண்டு உடைத்து விட்டு நான்கவது காலை அசத்யம் கொண்டு உடைக்க கலிபுருஷன் முற்படுவதையும் கண்டான். உடனே கோபம் கொண்டு கலியை கொன்றுவிட துணிந்தான். அப்பொழுது கலி புருஷன் பரிஷித்திடம் சரணடைந்து தான் தனது கடமையை மட்டுமே செய்வதாகவும், அதணால் தன்னை கொல்லாமல் தனக்கு வாழ வழி செய்யவேண்டும் என்வும் கேட்டான். அதற்கு பரிஷித் மகராஜா மனம் இரங்கினார் (சரணடைந்தவர்களை கொல்ல கூடாது என்பது ஒரு ராஜ தர்மம்).
கலியிடம் "சூதாட்டம், குடி, பெண்களை இழிவாக நடத்துமிடங்கள், பிராணிகளை வதைக்கும் இடங்களில் நீ வசிக்கலாம்" என்றார். கலி வசிக்க மேலும் சில இடங்களை கேட்கவும் "பொய் பேசப்படும் இடங்கள், காமம், கர்வம், பொறாமை, துவேஷம் நிறைந்த இடங்களில் வசிக்கலாம் . கலியால் பீடிக்க பட கூடாது என்றால் இவ்விடங்களை தவிர்க்க வேண்டும்" என்று கூறினார். இந்த கதை பாகவதத்தின் தொடக்கத்தில் வருகிறது.

ஸுகர் பாகவத புராணத்தை பரிஷித் மகராஜனுக்கு உபதேசிக்கு முன் ஒரு ஆசைகளை துறந்து வாழ்வதை பற்றி ஒரு சில வார்த்தைகளை கூறுகிறார். அப்பொழுது வீடுகளில் வாழ்வதை காட்டிலும் குகையிலே வாழ்வது சிறந்தது என்கிறார். நமது முன்னோர்கள் தொடங்கி இன்றும் கூட ரமண மகரிஷி போன்றோர் குகையிலே வசித்து வந்ததை அறிவோம். ஆனால் நம்முடைய புத்தகங்களோ குகையில் வசித்து இயற்கையோடு ஒத்து வாழ்ந்தவர்களை காட்டு மிராண்டிகளாக விவரிக்கின்றன. எனக்கு என்னமோ முன்னோர்கள் சகல அறிவையும் பெற்றிருந்த போதிலும் இயற்கையுடன் ஒத்து வாழ்வதே சிறந்தது என அறிந்து வந்ததால் எளிய வாழ்க்கை வாழ்ந்திருக்க வேண்டும் என்றே படுகிறது. இல்லாவிட்டால் நாம் முன்னோர்கள் மாபெரும் காப்பியங்கள் இயற்றி பெரு வாழ்வு வாழ்ந்தவர்கள் என்று நம்பும் வேளையில் மேற்கத்தியர் நம்மை குகையில் வாழ்ந்த காட்டு மிராண்டிகள் என்று ஆதரங்களுடன் கண்டுபிடித்திருப்பதாக சொல்லிக் கொள்வதற்க்கும் சமாதானம் காண முடியாது.

நன்றி: துக்ளக்கில் தற்போது "சோ' அவர்களால் எழுதப்படும் "இந்து மகா சமுத்திரம்" தொடர்.

"சூதாட்டம், குடி, பெண்களை இழிவாக நடத்துமிடங்கள், பிராணிகளை வதைக்கும் இடங்களில் நீ வசிக்கலாம்" என்று பரிஷித் கூறிய போது கலி நினைத்திருப்பான் " பெண்கள் குடித்து விட்டு தங்களை தாங்களே இழிவாக நடத்திக் கொண்டு அதில் பெருமைபடக்கூடிய club/bar/casino கள் மிகுந்த காலத்தை வர வைப்பேன். அது கூட தெரியாத இவனிடமெல்லாம் நான் சரணடைய வேண்டியிருக்கிறது, nonsense!".

Wednesday, August 23, 2006

"ஆட்டோ"கிராப் (அ) புது பேரம்

தாம்பரத்திலிருந்து அடையார், மயிலாப்பூர், திருவான்மியூர் எல்லாம் எப்படி போவது என்று என்னை கேளுங்கள் சொல்கிறேன். நேராக வேளச்சேரி விஜயநகர் பஸ் ஸ்டாண்டுக்கு வந்து விடுங்கள், அங்கிருந்து ஷேர் ஆட்டோ பிடித்து போய்க்கொள்ளுங்கள். 15 ரூபாய்குள் மேட்டர் முடிந்து விடும். அன்றைக்கு ஆனால் வேளச்சேரி வரை மட்டுமே செல்ல வேண்டியிருந்தது. ஆனால் அங்கே எதிர்பார்க்காமல் சந்தித்த நண்பன் ஒருவன் சொன்னபடி பெஸண்ட் நகர் சென்று ஜீஸ் குடிக்கலாம் என்று முடிவானது. அவன் நம்மை போல ஷேர் ஆட்டோ பார்ட்டி கிடையாது, கொஞ்சம் பெரிய இடம்.

ஆட்டோ ஒன்றை கூப்பிட்டான். அவர் 70 ரூபாய் சொல்லி 60 க்கு படிந்தார். ரொம்ப அதிகம் என்று நண்பன் நொந்துக்கொண்டான். ஆனால் ஒரு கோப்பை ஜூஸ் 45 ரூபாய் என்று ஆங்கிலத்தில் சொல்லவும் பேரம் பேசாமல் வாங்கி குடித்தோம். நேரம் குறைவாக இருந்ததால் உடனே கிளம்பிவிட்டோம். அந்த ஆட்டோகாரருக்கு என்னை பிடித்துவிட்டத்தோ என்னமோ அவரே வெளியில் காத்திருந்து என்னை ஏற்றிக்கொண்டார். (நீங்க குடுக்கறத குடுங்க சார்!).

அவர் என்னை பற்றி கேட்டார், நான் சொல்லி விட்டு பதிலுக்கு அவரை பற்றி கேட்டேன். மிகவும் சுவாரசியமான கதையாக இருந்தது அவருடையது. திருநெல்வேலி பக்கத்தில் ஏதோ ஒரு கிராமத்தை சேர்ந்த அவர் சின்ன வயதில் புத்தகங்களில் வரும் மெட்றாஸ் என்ற சொல்லை கேட்டு மிகவும் கவரப்பட்டதாகவும், 12 வயதில் கூட படிக்கும் சிலருடன் சென்னைக்கு ஓடி வந்து விட்டதாகவும், 3 நாட்கள் சென்னையில் பயந்துக் கொண்டே கழித்த கதையையும் மற்றும் சென்னையின் தன்மை அறிந்து கஷ்டப்பட்டு ஊர் போய் சேர்ந்ததாகவும் சொன்னார்.

பின்னர் பல்வேறு காரணங்களால் ஆட்டோ ஓட்ட நேர்ந்த கதையையும் ஆனால் திருநெல்வேலியில் நிறைய சொந்த பந்தங்கள் இருப்பதால் அவர்களுக்கு இலவச சவாரி செய்ய நேர்ந்ததால் சென்னைக்கு வேலை தேடி வர நேர்ந்ததாகவும், பல்வேறு வேலைகள் செய்து கடைசியில் ஆட்டோ ஓட்டுநராகவே ஆனதையும் விளக்கினார். (அவருக்கு வயது 42) தன் குழைந்தகளுக்கு நல்ல கல்வி கிடைக்க பாடுபடுவதையும் விளக்கினார். ஒரு சினிமாவை விட சுவரசியமாய் இருந்தது அவர் வாழ்க்கை.

இறுதியில் வேளச்சேரி வந்தவுடன் நான் ஒரு 100 ரூபாய் தாளை கொடுத்து "உங்க வாடகையை எடுத்துகொங்க" என்றேன். மிகவும் தயக்கத்துடன் 70 ரூபாய் மிச்சம் கொடுத்தார். நான் அவரிடம் மேலும் 20 ரூபாய் கொடுத்து "வெச்சிக்கங்க" என்று சொல்லி நடந்தேன். அவர் அன்புடன் பார்த்துக்கொண்டிருந்தார். தாம்பரம் வண்டி வர தாமதமானது. எங்கிருந்தோ அந்த ஆட்டோகாரர் திரும்ப வந்து "பஸ் வரலயா? கொஞ்ச நேரத்துல வந்திரும்' என்று சொல்லி நான் பஸ் ஏறினவுடன் சென்றார். எனக்கு அவசரமாக் தாம்பரம் திரும்ப வேண்டும் என்று சொன்னதை ஞாபத்தில் வைத்து என்க்கு உதவலாம் என்று வந்தார் என்று நினைத்தேன்.

இதை போலவே ஒரு அனுபவம் மதுரையில் ஒரு ஆட்டோகாரரிடம் நிகழ்ந்தது. அவருடைய கதையை என்ன காரணத்தினாலோ என்னிடம் பகிர்ந்து கொண்டது மட்டும் இன்றி வாடகையும் மிக குறைவாக கேட்டார். நான் வற்ப்புறுத்தி நார்மல் ரேட்டை கொடுத்தேன்.

நினைத்து பார்த்தால் எல்லோருக்குள்ளும் ஒரு கதை இருக்கிறது. அதை யாரிடமாவது பகிர்ந்துக் கொள்ள ஆசையும் இருக்கிறது. ஆனால் இந்த அவசர யுகத்தில் எல்லாம் பணதை பங்கு போட்டுக்கொள்வதில் கவனம் செலுத்து மனதை மறந்து மிருகமாக ஐந்துக்கும் பத்துக்கும் சண்டை போடுகிறோம். அன்பை ஆதாரமாக வைத்து நடக்கும் பேரம் வியாபர நியதிக்கு எதிர் திசையில் செல்வதை எப்பொழுதும் கவனித்திருக்கிறேன்.

"அன்பின் வழியது உயிர் நிலை" - திருவள்ளுவர்.